புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் இதுவரை 17 விழுக்காட்டினருக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரிக்கு 798 கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது. மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை.
புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை துணைநிலை ஆளுநர் உருவாக்குகிறார். அரிசி போடுவதை தடுத்துவிட்டு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது? அரிசி கொடுப்பதால் ஊழல் நடை பெறுகிறது என்கிறார்.
அரிசி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது நான் தவறான தகவல் வெளியிடுவதாக துணைநிலை ஆளுநர் கூறுகிறார். ராஜ் நிவாஸ் என்பது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது" என்றார்.