விவசாயிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், விவசாயம் செய்வதை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கான புதிய மொபைல் செயலி(mobile app) ஒன்றை இன்று அறிமுகப்படுத்தினார்.
'சி.ஹெச்.சி- ஃபார்ம் மெசினரி’ என்று பெயரிடப்பட்ட இந்தச் செயலியானது, அனைத்து வகையான மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் விவசாயிகள் வயல்களில் உழுவதற்கு வாடகைக்கு டிராக்டர்களையும், தேவையான மற்ற உபகரணங்களையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 40,000 மையங்கள் தொடங்கப்பட்டு, 1 லட்சத்து இருபதாயிரம் கருவிகள் அம்மையங்களில் வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதே விழாவில் அமைச்சர் நரேந்திர சிங் ’கிரிஷி கிஷான்’ என்ற மற்றொரு செயலியையும் அறிமுகப்படுத்தினார். கிரிஷி கிஷான் மூலம் விவசாயத் துறையில் புதிதாக தொழில்நுட்பக் கருவிகள் வந்தால் அதனை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். மேலும் வானிலை ஆய்வு குறித்த தகவல்களையும் விவசாயிகள் இந்தச் செயலியில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.