கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களின் பயண தூரத்தைச் சுருக்கும் வண்ணம் உத்தரகண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலேக் என்ற சீன எல்லைப் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார்.
இந்நிலையில், லிப்புலேக் பகுதி தங்கள் எல்லைக்கு உட்பட்டது என்றும், இதுபோன்ற ஊடுருவல் வேலையில் இந்தியா ஈடுபடுவதை நிறுத்துக்கொள்ளுமாறும் அண்டை நாடான நேபாள அரசு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக, இந்தியா-நேபாளத்துக்கு இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
இதனிடையே, கலபானி, லிப்புலேக் பகுதிகள் நேபாள எல்லைக்கோட்டுக்கு உள்ளே இருப்பது போன்ற வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் ஷர்மா ஒலி, "லிம்பியாதுரா, கலபானி, லிப்புலேக் பிரச்னையை நான் முடி மறைக்க விரும்பவில்லை. அது குறித்து தீர்வு காணப்படும். இந்தியாவுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியை மீட்டெடுப்போம்" என உறுதியளித்துள்ளார்.
ஆனால், சர்ச்சைக்குரிய இந்தப் பகுதிகள் உண்மையில் இந்திய எல்லைக்கு உட்பட்டதே.
இந்தியா-சீனா இடையே 1962ஆம் ஆண்டு கைழுயெத்தான ஒப்பந்தத்தில், இப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலம், பிதோராக் மாவட்டத்தில் உள்ள தார்சூலா வட்டாட்சிக்கு உட்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கலபானி-நபிதாங் இடையே ஒன்பது கி.மீ. பரப்பளவில் உள்ள பகுதி கர்பயாங் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதி என அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் ஐந்தாயிரம் ஓடைகளும், 704 பிளாட் விவசாய நிலங்களும் அடக்கம்.
அதேபோன்று, லிப்புலேக்-நபிதாங் இடையேயான பகுதி குன்ஜி கிராம ஒன்றியத்துக்கு உட்பட்டதாகவும் அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தார்சூலா உட்கோட்ட மஜிஸ்ட்ரேட் அனில் குமார் ஷுக்லா கூறுகையில், "கலபானி, லிப்புலேக் பகுதிகள் இந்தியாவுக்கு உட்பட்டது" எனக் கூறினார்.
இந்தப் பகுதிகளுக்கு நேபாள அரசு உரிமை கொண்டாடுவது உள்ளூர் வாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தார்சூலா-லிப்புலேக் இடையே சாலை அமைக்கும் பணி தொடங்குவதற்கு முன்பிருந்தே நேபாள அரசு இந்த இடங்கள் தங்களுடையது எனக் கூறிவருகிறது.
இந்த கசப்பான கருத்து வேறுபாடு தற்போது முழு மோதலாக உருவெடுத்துள்ளது. இந்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சான்குரு பகுதியில் புறக் காவல் நிலையம் ஒன்றை நேபாள அரசு அமைத்துள்ளது. மேலும், இன்னொரு புறக் காவல் நிலையத்தையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய ராணுவத் தளபதி, மூன்றாம் தரப்பின் அழுத்தத்தின் பேரில் நேபாளம் எதிர்ப்பை தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா-நேபாளம் மோதலும், சீனாவின் தலையீடும்