உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 30 குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என கூறிய மருத்துவர் கஃபீல் கான், சிறையிலிருந்து எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக்கடிதத்தில் மதுரா சிறைச்சாலையில் உள்ள நரகச் சூழ்நிலையை அவர் விவரித்துள்ளார்.
ஆனால், இக்கடிதம் குறித்து கேள்வி எழுப்பிய மதுரா சிறைக் கண்காணிப்பாளர் சைலேந்திர மித்ரி, "சிறைக்கைதிகள் எழுதம் கடிதங்களை நாங்கள் பார்வையிட்டுதான் வெளியே அனுப்புவோம். அதுபோன்ற கடிதத்தை அவர் வைத்திருக்கவில்லை. கரோனா ஊரடங்கினால் பார்வையாளர்கள் யாரும் சிறைக்கு வராதபோது இந்தக்கடிதத்தை அவர் எழுதியிரு்கக வாய்ப்பில்லை" என அவர் தெரிவித்தார்.
மருத்துவர் கஃபீல் கான் தனது குடும்பத்துக்கு அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "இங்கு ஒரு கழிவறையை 150 பேர் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய வியர்வை, சிறுநீரின் துர்நாற்றம் அடிக்கிறது. மின்சாரத் தடையினால் ஏற்படும் தாங்கிக்கொள்ள முடியாத சூடு வாழ்க்கையை நரகமாக்கிறது. இங்குள்ள வாழ்க்கை நரகம்தான். சிறையில் நான் புத்தகம் வாசிக்க விரும்புகிறேன். ஆனால், அந்தக் கழிவறை துர்நாற்றத்தால் எண்ணால் வாசிக்கமுடியவில்லை. சில நேரம் தலைசுற்றல் வருகிறது. நான் இருக்கும் செல் முழுவதும் மீன் சந்தையில் இருக்கும் துர்நாற்றத்தைப் போல் வீசுகிறது" என எழுதியுள்ளார்.
"நான் ஏன் தண்டிக்கப்பட்டேன்? எப்பொழுது நான் எனது குழந்தைகள், மனைவி,அம்மா, அப்பா, சகோதிரிகளைப் பார்ப்பேன்? ஒரு மருத்துவராக கரோனா வைரஸை எதிர்த்துப்போராடும் கடமையை நான் எப்பொழுது ஆற்றுவேன்" என சில கேள்விகளையும் அந்தக் கடிதத்தில் அவர் எழுப்பியுள்ளார்.
கஃபீல் கானின் சகோதாரர் அதீல் அகமது கான், இந்தக் கடிதத்தை கஃபீல்தான் எழுதியுள்ளார் என்றும் ஜூன் 15ஆம் தேதி எழுதிய கடிதம் அஞ்சல் வழியாக எங்களுக்கு ஜுலை 1ஆம் தேதி கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அவர் ஜனவரி 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதன்பின்பு அலிகார் நீதிமன்றம் அவருக்கு பிப்ரவரி 10ஆம் தேதி பிணை வழங்கியது. பிணைவழங்கிய இருநாட்களில் உத்தரப்பிரதேச அரசு பிப்ரவரி 13ஆம் தேதி அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. இதனால், அவர் இன்னும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால்தான் உள்ளார்.
இதையும் படிங்க: 'வருங்காலத்தில் கோவிட்-19 தோல்வி குறித்த ஆய்வுகளை ஹார்வர்டு மேற்கொள்ளும்' - ராகுல் காந்தி