டெல்லி: கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டு செயலி மட்டும்தான் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, அதன் செயல்பாடுகள் 2007ஆம் ஆண்டின் கடன் மற்றும் தீர்வு முறை சட்டத்தை மீறவில்லை என்று ரிசர்வ் வங்கி, தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வில் தெரிவித்துள்ளது.
கூகுள் பே எந்தவொரு கட்டண முறைகளையும் கையாளாததால், என்.பி.சி.ஐ வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு ஆபரேட்டர்கள் பட்டியலில் இந்நிறுவனம் இடம் பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே அல்லது ஜி பே. வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய வேண்டியதில்லை, வரிசை இல்லை, செயலி மூலம் அனுப்பிய பணம் நேரடியாக வங்கிக் கணக்கை சேரும் வசதி எனப் பல வசதிகளைக் கொண்டு, மக்களின் உற்ற நண்பனாகிப்போனது கூகுள் பே செயலி. 5 ரூபாய்க்கும் பொருட்களை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் கூகுள் பே உள்ளதா என்று கேட்கும் மனநிலை மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி இல்லை. இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை. செயலில் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்ளிட்ட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என்பது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன், அனூப் பாம்பணி அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் வங்கி செயல்பாடுகள் முறைப்படுத்தும் அமைப்பான ஆர்பிஐ-இடம் அனுமதி வாங்காமல், அமெரிக்க நிறுவனமான கூகுள் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை சேவையை எவ்வாறு செயல்படுத்தமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யச் சொல்லி இந்திய ரிசர்வ் வங்கிக்கும், கூகுள் இந்தியா நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர் நீதிமன்றம்.
குறிப்பாக, ரிசர்வ் வங்கி மார்ச் 20, 2019இல் வெளியிட்ட ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட "payment system operators List" எனப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தகுதி பெற்றிருக்கும் அமைப்புகளின் பட்டியலில் கூகுள் பே செயலி இல்லாததை அடிப்படையாக வைத்து, இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இதற்குப் பதிலளித்திருக்கும் கூகுள் நிறுவனம், 'தன்னுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கும் வங்கிகளுக்கு, தொழில்நுட்ப உதவி அளிக்கும் நிறுவனமாகத்தான் நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் தனித்து பணப் பரிவர்த்தனையை செயல்படுத்துவதில், தொழில்நுட்ப உதவிக்கு நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவை இல்லை' என்று கூறியிருக்கிறது.
இருப்பினும், பயனீட்டாளர்கள் தரவு பாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. தரவு திருட்டு உலக அளவில் மிகப்பெரும் வர்த்தகமாக மாறியிருக்கும் நிலையில், முறையான கண்காணிப்பு இன்றி ஒரு அமெரிக்க நிறுவனம், இந்திய மக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கையாளுவது என்பது இந்திய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பதை மறுக்க இயலாது.
ரிசர்வ் வங்கி, கூகுள் இரண்டும் முறையாக விளக்கத்தை அளித்து, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பதிலை சொல்லாவிடின், நீதிமன்றம் கூகுள் பே சேவையை முடக்க வாய்ப்பிருப்பது, குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விரிவான தகவல்கள் தேவைப்படுவதால் ஜூலை 22ஆம் தேதிக்கு இவ்வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.