உலகைச் சூறையாடிவரும் கோவிட்-19 நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அகமதாபாத்தில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 830 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 விஷயத்தில் குஜராத் அரசு மெத்தனம் காட்டிவருவதாக விமர்சனங்கள் குவிந்துவரும் வேளையில், அகமதாபாத் சிவில் மருத்துவமனை சர்ச்சைகளின் கூடாரமாகிவருகிறது.
இங்கு கோவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வசதிகள் குறித்து சமூக வலைதளத்தில் வெளியான காணொலிகள் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நோயாளிகளின் உயிருடன் மாநில அரசு விளையாடக் கூடாது எனச் சாடிய நீதிமன்றம், மருத்துவமனையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து, அரசு அலுவலர் குழு ஒன்று அம்மருத்துவமனை சென்று உரிய நடவடிக்கை மேற்கொண்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால், தொடர்ந்து அங்கிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் கோவிட்-19 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பல சமயங்களில் நோயாளிகள் உயிரிழந்து பல நாள்களுக்குப் பிறகே அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்படுவதாகவும், சீனியர், ஜூனியர் மருத்துவர்கள் இடையே ஒத்துழைப்பின்மை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்குமாறு சில சீனியர்கள் அனுபவம் இல்லாத ஜூனியர்களை ஏவிவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுபோன்ற பல சம்பவங்கள் அகமதாபாத் மக்களைப் பீதியில் உறையவைத்துள்ளது. உயிர்காக்கும் மருத்துவனையே உயிரை எடுப்பதாக அவர்கள் நினைத்து மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றன.
ஆனால் இது குறித்து குஜராத் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அங்கும் இங்கும் சிறு, சிறு மாற்றங்களைச் செய்துவிட்டு 'எல்லாம் நன்றாகவே உள்ளது' எனப் பெருமை பேசிவருகிறது.
அரசு நிர்வகித்துவரும் ஒரு மருத்துவமனை இத்தனை சர்ச்சைகளுக்கு உள்ளாவது அரசு மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. இனியாவது குஜராத் அரசு நடவடிக்கையை எடுக்குமா? எனக் கேள்வியுடன் தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கியுள்ளனர் குஜராத் மக்கள்.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட், குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் - ட்ரம்ப்