கிறிஸ்தவர்களின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையின் போது கிருஸ்துவர்கள் நாற்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கும் விதமாக, தவக்கால வாழ்க்கை வாழ்வது அவர்களின் வழக்கம். அதன்படி கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் துவங்கியது.
இதனைத்தொடர்ந்து தவக்காலத்தின் முக்கிய நாளான இன்று புனித வெள்ளி பண்டிகை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.
புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவைப்பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். சிலுவைப்பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். இதே போல் புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.