நேற்று முன்தினம் மாலை அகந்த் பாரத் சங்கர்ஷ் சமிதி (ஏ.பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிஏஏ ஆதரவுக் கூட்டத்தின் முடிவில் அதன் பேச்சாளர்களில் ஒருவர், ”துரோகிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்ற முழக்கத்தை மேடையில் எழுப்பினார்.
இந்தச் சர்ச்சைக்குரிய காணொலி சமூக வலைதளங்களில் பெருமளவில் பரப்பப்பட்டதை அடுத்து ஹைதராபாத் நகர காவல் துறையினர் இது தொடர்பாக தங்களது விசாரணையைத் தொடங்கினர். உள்ளூர்த் தொலைக்காட்சி சிலவற்றில் வெளியான காணொலியில், நிகழ்வின் இடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது பங்கேற்பாளர்களின் ஒரு குழு, “துரோகிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்” என்ற கோஷத்தை எழுப்பியது யாரென தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் "பாரத் மாதா கி ஜெய்", "எங்களுக்கு சிஏஏ வேண்டும்" போன்ற கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
இது குறித்து மூத்தக் காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ”நிகழ்வின் உச்சக்கட்டத்தில் எழுப்பப்பட்ட வன்முறையைத் தூண்டும் முழக்கம் தொடர்பாக நாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறோம். நிகழ்வின் முழுத் தொகுப்பும் கைவசம் கிடைத்துள்ளது. அதில் வன்முறையைத் தூண்டும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இருக்கிறதா இல்லையா என்று சட்டப்பூர்வமான நுணுக்கங்களை ஆராய்ந்துவருகிறோம். காவல் துறையினர் இந்த விஷயத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்றார்.
நிகழ்வின் அமைப்பாளர்களில் ஒருவர், ”முழக்கத்தை ஆதரித்துப் பேசிய பேச்சாளர் எந்தக் குழுவையோ மதத்தையோ குறிப்பிடவில்லை. அவர்கள் ”துரோகிகள் சுடப்பட வேண்டும்” என்று மட்டுமே கூறினர்” என அம்முழக்கத்தை எழுப்பியவருக்கு சார்பாகப் பட்டும்படாமலும் கருத்தைத் தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் சிஏஏவுக்கு எதிராகப் போராடுபவர்களைச் சுட்டுவீழ்த்துங்கள் என்று
மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: 'பாஜகவின் புதிய ஆயுதம் டெல்லி துப்பாக்கிச் சூடு' - திக்விஜய் சிங்