கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் பகுதியில் அறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. தொற்று மேலும் பரவாமல் இருக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கினை கடைபிடித்துவருகின்றன.
இருந்தபோதிலும், உலகில் கரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்து 45 ஆயிரத்து 569ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 78 ஆயிரத்து 949ஆகவும் உள்ளது. இந்தத் தொற்றிலிருந்து இதுவரை 50 லட்சத்து 36 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேர் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு திரும்பியவர்கள்.
பிரிட்டனில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 154 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயரத்து 81 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, பிரிட்டனில் வைரஸால் புதிகாக 653 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஆறாயிரத்து 862 பேராக உள்ளது.
தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 535 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆகவும் உள்ளது.
தென்கொரியாவில் இதுவரை 10 ஆயிரத்து 930 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், ஆயிரத்து 324 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அடுத்த வாரத்திற்குள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'பாகிஸ்தானில் 40% விமானிகள் போலி உரிமம் பெற்றுள்ளனர்' - அமைச்சர் குலாம் சர்வார் கான்