உயிரைக் கொல்லும் நச்சுக்கிருமியான கோவிட்-19 வைரஸ் தொற்று முதன் முதலாக சீனாவின் வூகான் பகுதியில் அறியப்பட்டது. மின்னல் வேகத்தில் ஐரோப்பாவிற்குள் பயணித்த இந்தக் கிருமி அங்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று, அந்நாட்டு மக்களை மரண பீதியில் வீடுகளில் முடங்கச் செய்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், கனடா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகள் அதிகம். கடந்த வாரம் 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் ஆயிரம் நபர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர்.
அதேபோல் இத்தாலியும் இல்லாமல் போகும் அளவிற்கு உயிரிழப்பு மற்றும் பாதிப்பை சந்தித்துவருகிறது.
அடுத்த இரண்டு வாரம் கடும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும், யாரும் வெளியே வர வேண்டாம் என கைகூப்பி கெஞ்சுகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். உங்கள் வீட்டின் வெளியே லட்சுமணக் கோடு கிழிக்கப்பட்டுள்ளது என நினைத்துக்கொள்ளுங்கள். அதனைத் தாண்டினால் ஆபத்து நிச்சயம், வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்கிறார் இறுகிய முகத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
உலகெங்கிலும் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை ஒன்பது லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 286 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்து 245க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த கரோனா வைரஸ் பெரும்பாலான மக்களுக்கு ஒரே மாதிரியான அல்லது மிதமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல் நலப் பிரச்னைகள் கொண்டவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவர்களை இந்த வைரஸ் எளிதாகத் தாக்குகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் கடந்த 72 மணி நேரத்தில் 1,941 பேர் கோவிட்-19 தொற்று நோய்த் தாக்கி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இது இரட்டிப்பு உயிரிழப்பு ஆகும்.
நியூயார்க்கில் முதல் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் மரணம் கடந்த மாதம் (மார்ச்) 13ஆம் தேதி நிகழ்ந்தது. 82 வயதான பெண்மணி ஒருவர் முதல் மரணத்தை தழுவினார். அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனையில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோவிட்-19 பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் உலகெங்கிலும் கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு நிமிடத்துக்கு நிமிடம் ஒரு உயிர் பறிபோவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி இஸ்லாமிய மதக் கூட்டத்தில் பங்கேற்ற மூவர் உயிரிழப்பு!