கரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாகவே மருத்துவத்துறையை படுவேகமாக செயல்பட வைத்திருக்கிறது.
சீனாவில் பரவ தொங்கிய இந்த வைரஸ் தாக்குதல், தற்போது கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.
என்னவென்று கண்டறியும் முன்னரே காவு வாங்கத் தொடங்கிய இந்த வைரஸ் விஷம் உலகத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 900க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரானா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வூஹான் நகரம், கரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பீதியால் யோகோஹமா துறைமுகப் பகுதியில், 138 இந்தியர்கள் உள்ளிட்ட 3,700 பேருடன் சென்ற பிரமாண்டமான சொகுசுக் கப்பல் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அதில், கரோனோ வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 63 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து கப்பலுக்கு ராணுவத்தை அனுப்ப ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிகிச்சைக்கு ரோபோக்களைப் பயன்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா பீதி - சொகுசுக் கப்பலில் சிக்கிய 138 இந்தியர்கள்