திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த உருமாற்றமடைந்த வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வீரியம்மிக்க கரோனா வைரஸ் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில்," கேரளாவில் கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு கோழிக்கோடு ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாற்றம் அடைந்துள்ள புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.
பிரிட்டனிலிருந்து கேரளா திரும்பிய எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களது ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்விற்காக பூனேவிலுள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும். சுகாதாரத்துறை முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளாவில் காதல் திருமணம் முடித்த இளைஞர் வெட்டிக்கொலை.. ஆணவக் கொலையா என விசாரணை!