இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் ராஜஸ்தானி மொழியையும் இணைக்க வேண்டும் என அம்மாநில மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால், மத்தியில் அமைகின்ற அரசுகள் அந்த மாநிலத்தில் இந்தி மொழி பிரதானமாக பேசப்படுவதால் ராஜஸ்தானி மொழியை அங்கீகரிக்க தொடர்ந்து காலம் தாழ்த்திவருகின்றனர்.
இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ராஜஸ்தானி மொழிக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இந்த மொழியை இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல், இந்த கோரிக்கை ராஜஸ்தான் மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கை என குறிப்பிட்டுள்ள கெலாட், இந்த மொழி அங்கீகரிக்கப்படுவதன் மூலம் மாநிலத்தின் பாரம்பரியம் காக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.