காந்தி என்றவுடன் அண்ணலின் அரசியல், பொது வாழ்வு குறித்தே அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதேவேளை, நவீன மருத்துவம், உடல்நலன், பொதுச்சுகாதாரம் குறித்து காந்தியின் பார்வை பெரிதாகப் பேசப்படுவதில்லை.
காந்தியின் 16ஆவது வயதில் அவரது தந்தை நோய்வாய்பட்டிருந்தார். காந்தியும் அவரது தாயாரும் சேர்ந்து தந்தைக்கு செவிலியர்களைப்போல் பணிவிடைகளைச் செய்துகொடுத்தனர்.
இதன் காரணமாக காந்திக்கு இளம் வயதிலேயே மருத்துவம் உடல்நலன் குறித்த அனுபவம் கிடைக்கப்பெற்றது. அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவில் சில ஆண்டுகளுள் ராணுவத்தில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்த அனுபவம், பிற்காலத்தில் தன் குழந்தைகளை வளர்க்கப் பெரிதும் உதவியது என்றார் காந்தி.
அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு காந்தி மருத்துவமனைக்குச் சென்றதில்லை. சொல்லப்போனால் காந்தி மருத்துவர்களை அணுகியது அரிதினும் அரிது எனலாம். தனது வீட்டிலேயே இயற்கைமுறை மருத்துவத்தை மேற்கொள்ளப் பழக்கப்பட்டிருந்தார் காந்தி.
தூய்மையை பெரிதும் வலியுறுத்திய காந்தி தூய்மை என்பது புறத்தூய்மையுடன் சேர்ந்து அகத்தூய்மையையும் சார்ந்தே காணப்படும் என்றார். ஆரோக்கியமான வாழ்விற்கு 76 தூய்மையுடன் சேர்ந்து ஆரோக்கியமான மனநிலையும் அவசியம் என வலியுறுத்தினார்.
ஜான் ரஸ்கின், பென்தம், தால்ஸ்தோய் ஆகியோரின் எழுத்துகள் காந்தியின் வாழ்க்கையை மாற்றியமைத்தது எனலாம். பின்னாளில் லூயிஸ் குஹ்னேவின் மருத்துவம் சார்ந்த எழுத்துகள் காந்தியை இயற்கை மருத்துவத்தின் பக்கம் திருப்பியது.
இயற்கை மருத்துவத்தின் பக்கம் திரும்பிய காந்தி, நீர் மருத்துவம், தாவர மருத்துவம், சேற்று மருத்துவம் போன்றவற்றைத் தனது வாழ்நாளில் பயிற்சி செய்து பார்த்தார்.
மருத்துவம் மனிதனின் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர சிக்கல்களுக்கான காரணமாக இருக்கக்கூடாது என விரும்பியவர் காந்தி. உதாரணமாக பெரிய அம்மை நோய் அக்காலத்தில் மக்களைத் தீவிரமாக வாட்டி வதைத்துவந்தது. அந்த நோய்க்குக் காரணமாக விளங்கும் வைரஸ் கிருமிக்குப் பின்னாளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த வைரஸே விஞ்ஞானி நடத்திய சோதனையின் தவறான விளைவால்தான் உருவானது என்பதே நகைமுரண்.
இதன் காரணமாகவே நவீன மருத்துவத்தை எச்சரிக்கையுடன் பெருமளவில் தவிர்த்துவந்தார் காந்தி. நோய் நாடி அதனுடைய மூல காரணத்தை ஆராய்ந்து அதைத் தவிர்க்கவே பெரிதும் விரும்பினார் காந்தி. சுகாதாரமே சிறந்த மருந்து என அறிவுறுத்திய காந்தி தூய்மையான உடல்நலனை, தூய்மையான மனநலனையும் மனிதன் ஒருங்கே பெறவேண்டும் என்றார். ஆரோக்கியமான வாழ்விற்கு இதுவே சரியான தீர்வாக அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
இதையும் பார்க்கலாமே: தீண்டாமைக்கு எதிராக தியோகரில் களம் கண்ட காந்தி!