ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா கலந்துகொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர்,
காஷ்மீர் பகுதிகள் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஆனால், எங்களுக்கென்று தனி அடையாளமும், தனி அரசியலமைப்பு சட்டமும் வேண்டும். மேலும் எங்களுக்கென தனி பிரதமர், தனி ஜனாதிபதி என்ற முறை திரும்ப வர வேண்டும் எனக் கூறினார்.
இதனிடையே உமர் அப்துல்லாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தபிரதமர்மோடி, காங்கிரஸ் மாநாட்டு கட்சி காலத்தை பின்னோக்கி திருப்ப விரும்புவதாகவும், பாஜக இதை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தனி பிரதமர் முறைக்கு காஷ்மீர் திரும்ப நேரிடும் என்ற உமர் அப்துல்லாவின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என விரும்புகிறார். நான் பெருங்கடலில் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். பன்றிகள் பறக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு காபி அருந்தி விட்டு உமர் அப்துல்லா சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என எண்ணுகிறேன். அப்போதும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.