முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங்குக்கு ஞாயிற்றுக்கிழமை (மே10) மாலை நெஞ்சு வலி ஏற்பட்டது. மேலும் அவரது உடலில் காய்ச்சல் அறிகுறியும் இருந்தது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12.35 மணியளவில் மன்மோகன் சிங் வீடு திரும்பினார். எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்குக்கு வழக்கமான இரத்த பரிசோதனையும் நடந்துள்ளது. மேலும் அவர் இருதயவியல்துறையை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையிலும் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு 1990ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் 2003ஆம் ஆண்டில் இருதய சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து அவருக்கு 2009ஆம் ஆண்டு இருதய சிகிச்சை நடந்தது. எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மன்மோகன் சிங்குக்கு ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்பட்டார். இதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தது” என்றார்.