கேரள மாநிலத்தில் பலரிவத்தோம் பகுதியில் கட்டப்பட்ட ஃப்ளைஓவர் ஏற்பட்ட விரிசல் வழக்கில், பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (ஐ.யூ.எம்.எல்) மூத்த சட்டப்பேரவை உறுப்பினருமான வி.கே. இப்ராஹிமை லஞ்சம் ஒழிப்புத் துறை அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் ஆட்சிக் காலத்தில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த 750 மீட்டர் ஃப்ளைஓவர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் எனக் கூறப்பட்டது. 2016இல் திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஃப்ளைஓவரை மூடினர். அரசுக்குச் சொந்தமான சாலைகள், பாலங்கள் மேம்பாட்டுக் கழகத்திற்காக டெல்லியைச் சேர்ந்த ஆர்.டி.எஸ். திட்டங்களால் இந்த ஃப்ளைஓவர் கட்டப்பட்டது. கிட்கோ இந்தத் திட்டத்தின் மேற்பார்வை ஆலோசகராக இருந்தார்.
இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே நான்கு பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்கள், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் இப்ராஹிமை லஞ்சம் ஒழிப்புத் துறை அவ்வப்போது விசாரித்துவந்தது. இந்நிலையில், நேற்று திடீரென இப்ராஹிம் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், தனியார் மருத்துவமைனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்டு, மருத்துவமனையில் வைத்தே அவரை அதிரடியாக கைதுசெய்தனர். இவரை இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியாக குறிப்பிட்டுள்ளனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாவது விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அவருக்குப் பின்னடைவு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.