திலிப் பாரிக்
குஜராத் மாநிலத்தின் 13ஆவது முதலமைச்சராக பதவி வகித்தவர் திலிப் பாரிக். 82 வயதான இவர், இன்று மாலை வயது முதிர்வு காரணமாகக் காலமானார். 1937ஆம் ஆண்டு பிறந்த திலிப் பாரிக், மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்.
சிறந்த பொருளாதார அறிஞராக திகழ்ந்தவர். 1995ஆம் ஆண்டு பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றார். இந்த நிலையில் 1996ஆம் ஆண்டு குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.
முதலமைச்சர்
மூத்தத் தலைவர் சங்கர்சிங் வகேலா கட்சியைப் பிரித்து ராஷ்ட்ரிய ஜனதா கட்சியை உருவாக்கினார். பின்னர் இக்கட்சியில் திலிப் பாரிக் இணைந்தார். இக்கட்சியை வெளியிலிருந்து இயக்கிய காங்கிரஸ், சங்கர்சிங் வகோலாவை முதலமைச்சர் ஆக்கியது.
இது நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. 1997ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து சமாதான பேச்சுகள் தொடர்ந்தன. முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
பதவிக்காலம்
இதையேற்று சங்கர்சிங் வகேலா பதவி விலகினார். மாநிலத்தின் 13ஆவது முதலமைச்சராக திலிப் பாரிக் பதவியேற்றுக் கொண்டார். இவரின் ஆட்சி ஓராண்டு நீடித்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றிப் பயணத்தை நோக்கி காங்கிரஸ்?