மகாராஷ்டிரா,ஹரியானாவில் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியும் சரத் பவாரும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி சிறப்பான பணியை செய்துள்ளதாகப் பாராட்டிய அமித் ஷா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த முடிவை காரணமின்றி எதிர்த்து வருகின்றன எனப் புகார் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்புப் படையினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை மாறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதேபோல் நமது பாதுகாப்பு வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க:மத்திய அமைச்சர்கள் குழுவை காஷ்மீருக்கு அனுப்புங்கள்: மோடிக்கு காஷ்மீர் எம்.பி. கடிதம்..!