ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான நாட்டுப்புற நடனக் கலைஞர் ஹரிஷ் குமார். இவர் பெண் வேடமிட்டு நடனமாடி மக்களை மகிழ்விப்பதில் வல்லவர். எனவே இவரை செல்லமாக 'குயின் ஹரிஷ்' என்று அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று இவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மருக்கு சென்று கொண்டிருந்த போது கபர்டா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் விபத்தில் ஹரிஷ் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், " சாலை விபத்தில் நடனக் கலைஞர் ஹரிஷ் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் சோகத்தை தருகிறது. நாட்டுப்புற நடனக் கலைக்கு அவர் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார். அவரின் மறைவு நாட்டுப்புற கலைக்கு பேரிழப்பு" என தெரிவித்துள்ளார்.