பீகார் மாநிலம் கடிஹார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, நவ்ஜோத் சிங் சித்து நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
நீங்கள் (இஸ்லாமியர்கள்) உங்களை சிறுபான்மையினராக கருத வேண்டாம். இந்த தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள்தான் பெரும்பான்மையினர். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து மோடியை தோற்கடியுங்கள் எனக் கூறினார்.
இந்நிலையில் சித்துவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், பிரிவினையை தூண்டும் விதமாக காங்கிரசார் நடந்து கொள்வதாக பிகார் மாநில பாஜக துணைத்தலைவர் தாவீஷ்குமார் குற்றம் சாட்டினார்.
இதனிடையே இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய நவ்ஜோத் சிங் சித்து மீது பாரஷோய் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் துணை ஆய்வாளர் ஜாவத் அகமத் இது குறித்து விசாரிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.