கரோனா எதிரான இந்தியாவின் போர் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை மே மாத இறுதிதான் முடிவு செய்யும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். நிதி ஆயோக்கின் புள்ளி விவரம், இந்த மாதம் 15ஆம் தேதிக்கு இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்துக்கு உயரும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அது 2.7 கோடியை எட்டிவிடும் என்கிறது. இந்தப் பெருந்தொற்றால் மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தும் ஏற்படப்போகும் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கம் இரு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதில் முதலாவது, தேசிய அளவில் ஊரடங்கை இரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டு, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது. அடுத்தது, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது.
பாதிப்பு அதிகமாகவுள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற இடங்களில் சில கட்டுப்பாடுகளுடன் சந்தை மற்றும் பிற வியாபாரங்கள் இயங்க அனுமதியளித்தது மாநிலங்களில் பொருளாதார சிக்கலை சமாளிக்க வழிவகை செய்கிறது. ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து மே 1ஆம் தேதிக்குள், 170 சிவப்பு மண்டலங்கள் 130ஆக குறைந்துள்ளது. ஆனால் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை 284-க்கு உயர்ந்துள்ளது. இதே வேளையில், பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இது கரோனா பரவலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பதினைந்து நாட்களாக தினமும் ஆயிரத்தை தாண்டியிருந்தது, அது சில தினங்களாக இரண்டாயிரத்தை கடந்திருக்கிறது. கரோனா பரவலின் வீரியத்தை குறைக்க இந்திய அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு சற்று உதவியிருக்கிறது, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நிலை நமக்கு இல்லை.
இந்திய அரசாங்கம் தனது 419 பரிசோதனை நிலையங்களின் வாயிலாக ஒரு நாளுக்கு 75,000 பரிசோதனைகள் மோற்கொள்கிறது. தற்போது அரசாங்கத்தால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொருவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% அவர்களின் மூலம் கிடைக்கிறது. இவர்கள் சொந்த ஊரைவிட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் திறமைக்கான வேலையை தேடிக்கொள்கின்றனர். கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 9.95 கோடி குடும்பங்கள், நகர்ப்புறத்தைச் சேர்ந்த 3.56 கோடி குடும்பங்களுக்கு இவர்களின் செலவு முக்கிய வருவாயாக உள்ளது.
தற்போதைய கரோனா சூழலில் வெளிமாநில தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக மாறியுள்ளது. அவர்களின் துயரத்தை சொல்லில் விவரிக்க இயலாது. மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கஎ, பிகார், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசாங்கம் சிறப்பு ரயில் சேவையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்த சில விதிமுறைகளை அரசாங்கம் வகுத்துள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதால், கரோனா பரவல் தீவிரமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். சமீபத்தில் பஞ்சாப் மாநில அரசு, மகாராஷ்டிராவின் நாந்தேடு நகரிலுள்ள குருத்வாராவில் சிக்கிய தங்கள் சீக்கிய யாத்திரிகர்களை மீட்டுக்கொண்டது. அதன்பிறகு அம்மாநிலத்தில் அவர்களால் கரோனா பரவல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. பிகார் மாநில அரசாங்கம் இதனால் அச்சத்தில் உள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப பதிவு செய்துள்ளனர்.
இந்த வேளையில், சரியான முறையில் அவர்களை பரிசோதனை செய்து பயணிக்க அனுமதிப்பது முக்கிய பொறுப்பாகும். இதில் கவனம் செலுத்தத் தவறினால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.
இதையும் படிங்க: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், அதிசயமா! ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்!