நாடு முழுவதும் தற்போது திருவிழாக் காலம் என்பதால் தேசியத் தலைநகரான டெல்லியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெருந்தொற்று பரவலைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட வியூகங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என உள்துறை செயலர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர், டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்றாம் கட்ட கரோனா பரவல் குறித்த ஆய்வறிக்கை இந்த ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆலோசனைக்கு உள்படுத்தப்பட்டது. இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் சோதனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாக் காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதன் காரணமாகவே கரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.