நொய்டாவில் உள்ள தனியார் செய்தி ஊடகத்தில், செய்தி ஆசிரியராக பணிபுரிந்துவருபவர் மிதாலி சண்டோலா. இன்று அதிகாலை 12.30 மணியளவில் வேலை முடிந்து தன் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தர்மஷிலா நாராயணா சிறப்பு மருத்துவமனை அருகே, சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வாகனத்தின் முன்புற கண்ணாடியில் முட்டைகளைக் கொண்டு தாக்கிய அந்நபர்களைத் தவிர்த்து, மிதாலி தன் வாகனத்தைச் செலுத்த முற்பட்டுள்ளார். அச்சமயத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக, தாக்குதல் காரர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு இரண்டு முறை, வாகனத்தில் ஜன்னல் கண்ணாடி வழியாகச் சுட்டுள்ளனர். இதில் கையில் குண்டு துளைத்த காயங்களுடன் மிதாலி சண்டோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரைப் பரிசோதித்து வரும் மருத்துவர்கள், மிதாலி அபாயக் கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 2017ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் பிரபல செய்தி ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது.