கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அரீகோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (22). இவர் ராணுவத்தில் பணியாற்றும் பிரிஜேஷ் என்ற பட்டியலின இளைஞரைக் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.
இதையறிந்த ஆதிராவின் தந்தை ராஜன், இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் தந்தைக்கும், மகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆதிரா, தன் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
காதல் விவகாரம் காவல் துறையினரிடம் செல்ல, காவலர்களின் எச்சரிக்கையின் பேரில் ராஜன் அரைமனதாகத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.
மார்ச் 23ஆம் தேதி அரீகோட்டில் இருக்கும் கோயிலில் உறவினர்கள் சூழ தனது திருமணம் நடைபெறும் என மணமகள் ஆதிரா திருமணக்கனவுகளுடன் லயித்திருந்தார். ஆனால், மார்ச் 22ஆம் தேதி இரவு ஆதிராவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அவருடைய தந்தை ராஜன் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறியநிலையில், திருமண மண்டபத்துக்கு வந்தார். தனது மகள் ஆதிராவிடம் திருமணத்தை நிறுத்தக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், மகள் ஆதிரா திருமணத்தை நிறுத்த சம்மதிக்கவில்லை.
தன் வார்த்தைக்கு மகள் மதிப்பளிக்கவில்லை என ஆத்திரம் கொண்ட ராஜன், தான் வைத்திருந்த கத்தியால் மகள் என்றும் உணராமல் ஆதிராவைக் குத்திக் கொலை செய்தார். பலத்த காயமடைந்த ஆதிரா உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜன் கைது செய்யப்பட்டார். மஞ்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், முதன்மை சாட்சிகளாக ஆதிராவின் தாயும் சகோதரனும் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் ராஜனுக்கு ஆதரவாக சாட்சியம் தெரிவித்தனர். இதையடுத்து, சொந்த மகளை ஆணவக்கொலை செய்ததாக சந்தேகப்பட்ட வழக்கிலிருந்து ராஜனை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிகழ்வு சமூக செயல்பாட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உ.பி.,யில் மனைவி, மகள்கள் கொலை