கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடப்பா, தனது காருக்கு பதிவுசெய்திருந்த ஃபாஸ்ட்டேக் வசதி செயல்படாததால், ஃபாஸ்ட்டேக் சேவை மையத்தை தொடர்புகொண்டுள்ளார். ஆனால், யாரும் அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், சில நிமிடங்களில் வெங்கடப்பாவின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், "சார் நாங்கள் ஃபாஸ்ட்டேகிலிருந்து பேசுகிறோம். உங்களின் ஃபாஸ்ட்டேக் பிளாக் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மீண்டும் அன்பிளாக் செய்ய விரும்பினால் உடனடியாக டெஸ்க் செயலி அல்லது குயிக் சப்போட் செயலியைப் பதிவுசெய்ய வேண்டும்" எனத் கூறியுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய அவர், உடனடியாக டெஸ்க் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர், அதில் வங்கிக் கணக்கின் தகவல்களைப் பதிவுசெய்த வெங்கடப்பா, ஒருமுறை கடவுச்சொல்லை (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தட்டச்சு செய்துள்ளார்.
அவ்வளவுதான் சில நொடிகளிலே அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 483 ரூபாயை சுருட்டியுள்ளனர். இதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த வெங்கடப்பா, உடனடியாக சைபர் பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தார்.
ஆன்லைனில் நடைபெறும் மோசடி தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், புதிய முறைகளில் சாதாரண மக்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.