காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிக்கான சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை ஏற்பட்டுள்ளது. சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்ட சமயத்தில் கடும் கெடுபிடிகள் நிலவியதோடு, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு அம்மாநிலத்தில் பதற்றம் நிலவியது. அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான், சீனா ஆகியவை எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன.
இதனிடையே காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் பற்றிய தகவலும் மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், சென்னையில் வரும் 15ஆம் தேதி மதிமுக சார்பில் நடைபெற உள்ள மாநாட்டின் அழைப்பிதழில் ஃபரூக் அப்துல்லாவின் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துவருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் அவர் குறித்த தகவல் எதுவும் தெரியாத நிலையில், அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக ஃபரூக் அப்துல்லாவை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்று உள் துறை அமைச்சம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.