ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆகஸ்ட் 5ஆம் தேதி லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாநிலத்திற்கு வழங்கிவந்த சிறப்புத் தகுதியை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திவந்தனர்.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்த மத்திய அரசு லடாக் -ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அக்டோபர் 31ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது.
வீட்டுக் காவலில் இருக்கும் ஃபரூக் அப்துல்லா எப்போது விடுவிக்கப்படுவார் என்ற தகவல் ஏதும் தெரியாமல் இருந்தது. மக்களவை குளிர்காலக் கூட்டத்தொடரில் தன்னை பங்கேற்கவிடாமல் மத்திய அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஃபரூக் அப்துல்லா குற்றஞ்சாட்டினார். அண்மையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஃபரூக் அப்துல்லா பதில் கடிதம் எழுதினார்.
அதில், "அக்டோபர் 21ஆம் தேதி நீங்கள் (சசிதரூர்) எழுதிய கடிதம் எனக்கு இன்றுதான் கிடைத்தது. நான் கிளைச் சிறையில் இருக்கிறேன். எனது வீட்டையே கிளைச்சிறையாக மாற்றிவிட்டனர். என்னை இவ்வாறு நடத்துவது முறையல்ல. நாங்கள் குற்றவாளிகள் அல்ல" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் ஃபரூக் அப்துல்லாவிற்கான வீட்டுக் காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள் துறைக்கான ஆலோசனைக் குழு ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் குறித்து மறு ஆய்வு செய்தது. அதன்படி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரது தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்கக் கோரி அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: செய்தியாளரின் பின்புறத்தில் தட்டிய அமைச்சர்... அதிர்ச்சியில் மக்கள்!