காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிக்கான சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை ஏற்பட்டுள்ளது. சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்ட சமயத்தில் கடும் கெடுபிடிகள் நிலவியதோடு, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு அம்மாநிலத்தில் பதற்றம் நிலவியது. அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான், சீனா ஆகியவை எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இதனிடையே காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக தலைவர்கள் யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் குறிப்பாக பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மீது பாய்வதே வழக்கம் என்ற நிலையில், தற்போது முதன்முறையாக மூன்று முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த ஃபரூக் அப்துல்லா மீது பாய்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஃபரூக் அப்துல்லா ஊடகங்களை சந்தித்து பேசினால் அது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள், சட்ட வல்லுநர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.