ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நின்தார் கிராமத்தில் விவசாயிகள் மாநில அரசுக்கு எதிராகச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை முறையின்றிப் பயன்படுத்தி அதன்மூலம் தங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த 21 விவசாயிகள் மண்ணுக்குள் புதைந்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
'ஜமீன் சமாதி சத்தியாகிரகம்' என்ற பெயரில் கடந்த நான்கு நாள்களாக நடைபெறும் இப்போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் வளர்ச்சித் திட்டப்பணிக்காக இப்பகுதி விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. உரிய இழப்பீட்டுத் தொகை அளிக்காமல் குறைந்தளவு பணத்தை அரசு தர முன்வந்த நிலையில், இவர்கள் அதனைப் பெற மறுத்துவிட்டனர். தங்களின் வாழ்வாதாரமான நிலத்தையே திருப்பி அளிக்குமாறு இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போரட்டம் வரும் நாள்களில் தீவிரமடையும், மேலும் பலர் தங்களுடன் இணைவார்கள் எனப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் நகேந்திர சிங் ஷெகாவத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படை