மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் தொடர்பான மூன்று சட்டங்கள், விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020, விவசாயிகள் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020. ஆகியவற்றை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முற்றுகையிட்டு 20 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கும் சன்யுக்ட் கிசான் மோர்ச்சா அமைப்பினர், ஹரியானா-ராஜஸ்தான் எல்லைகளுக்கு அருகிலுள்ள ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் பயணிகளுக்கு புதிய வேளாண் சட்டங்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
விவசாயிகள் விநியோகிக்கும் துண்டுப்பிரசுரங்களில், "எங்களது பயிர்களுக்கு நியாயமான விலையை தவிர எந்தவொரு தொண்டையும் விரும்பவில்லை. இந்தக் கோரிக்கையுடன் டெல்லிக்குள் நுழைய விரும்புகிறோம், எங்கள் கருத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ளோம்.
மக்கள் எங்களை உணவு வழங்குபவர்கள் என்றும் அழைக்கிறார்கள். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க பரிசை கொண்டு வந்ததாகக் கூறுகிறார்.
இது பரிசு அல்ல, தண்டனை. தயவுசெய்து உங்கள் பரிசை நீங்களே வைத்திருங்கள். நீங்கள் எங்களுக்கு ஒரு பரிசை வழங்க விரும்பினால், எங்கள் பயிர்களின் நியாயமான விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எல்லையில் சாலை முற்றுகைப் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்காக கைக்கூப்பி மன்னிப்பு கோரியுள்ளனர். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மத்திய அரசு தொடர்ந்து நடித்துவருகிறது. விவசாயிகளின் எந்தவொரு பிரச்சினை குறித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!