தெலங்கானா மாநிலம் பாலாபூரில் கணேஷ் பூஜா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக அங்கு தயாரிக்கப்படும் லட்டை வைத்து 11 நாள்கள் பிரத்யேக பூஜை செய்யப்பட்டு ஏலத்தில் விடுவார்கள். இந்த நடைமுறையானது 1994 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ரூ. 450க்கு விற்பனையான லட்டு, 2010ஆம் ஆண்டில் 10 லட்சத்தை அள்ளியது. அன்றிலிருந்தே லட்டின் மவுசு மக்கள் மத்தியில் அதிகமானது. கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட பாலாபூரின் கணேஷ் லட்டை கோலன் ராம் ரெட்டி ரூ .17 லட்சத்து 60 ஆயிரத்திற்கு வாங்கினார்.
அந்த வகையில், இந்தாண்டும் லட்டின் ஏலம் பட்டையை கிளப்பும் என எதிர்பார்த்த நிலையில், கரோனா (தீநுண்மி) தொற்றின் காரணமாக ஏலத்தை ரத்து செய்யலாம் என பாலாபூர் கணேஷ் குழு முடிவு செய்துள்ளது. அந்த ஃபேமஸ் லட்டை மாநிலத்தின் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கு அன்பளிப்பாக கமிட்டி சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த லட்டு மூலமாக கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி அடுத்த ஆண்டுக்கான கணேஷ் பூஜை கொண்டாட்டத்திற்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகையை அமைப்பாளர்கள் பாலாபூர் பகுதியில் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.