மகாராஷ்டிரா மாநிலம் தானேவை அடுத்துள்ள பிவாண்டியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவராக இருப்பவர் காலித் குடு. அவரது அலுவலகத்தில் அரசு முத்திரையுடன் கூடிய ரேஷன் கார்டுகள் அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், குடு, அவரது சகோதரர் பப்லு ஆகியோரது அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 23) தானே காவலர்கள், வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலி வாக்காளர் அடையாள அட்டைகள், போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கையகப்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிசிபி (மண்டலம் II) ராஜ்குமார் ஷிண்டே கூறுகையில், "ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் பிரமுகர் காலித் குடு, அவரது சகோதரர் மற்றும் உதவியாளர் மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இந்த போலி அட்டைகள் தேர்தல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டவை என குடு தகவல் கூறியுள்ளார்.
ஐபிசி பிரிவுகளான 465 (மோசடி), 467 (மதிப்புமிக்க பாதுகாப்பை மோசடி செய்தல், விருப்பம் போன்றவை), 472 (கள்ள முத்திரையை உருவாக்குதல் அல்லது வைத்திருத்தல்), 420 (மோசடி குற்றம் புரிந்தது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் மிரட்டி பணம் பறித்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோதனையில் 38 போலி ரேஷன் கார்டுகள், ரப்பர் ஸ்டாம்புகள், 30 ஆதார் அட்டைகள், அவர்களது அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டன. அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரேஷன், ஆதார் கார்டுகள் அனைத்தும் சரிபார்ப்புக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் போலி என கண்டறியப்பட்டது" என தெரிவித்தார்.