டெல்லி: ஃபேஸ்புக் நடவடிக்கைகளின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியா பிராந்தியங்களுக்கான பொதுக் கொள்கையின் இயக்குநராகப் பணியாற்றிய அங்கி தாஸ் தனது பதவியை செவ்வாய்க்கிழமை (அக்.27) ராஜினாமா செய்தார்.
முன்னதாக அவர் மீது, பாஜகவின் வெறுப்பு அரசியல் பரப்புரைகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது குறித்து ஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் கூறுகையில், “பொது சேவையில் ஆர்வம் காட்ட ஃபேஸ்புக்கில் தனது பங்கிலிருந்து விலகுவதற்கு அங்கி முடிவு செய்துள்ளார். அங்கி இந்தியாவில் எங்கள் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் நிறுவனத்தின் மற்றும் அதன் சேவைகளின் வளர்ச்சியில் ஒரு கருவியாக இருந்தார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் எனது தலைமைக் குழுவில் ஒரு அங்கமாக இருந்துவருகிறார், அதில் அவர் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவரது சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் டைம் உள்ளிட்ட வெளிநாட்டு பத்திரிகைகள், ஆகஸ்ட் மாதத்தில் ஃபேஸ்புக் பாஜக மற்றும் அதனுடன் தொடர்புடைய கணக்குகளை நிறுவனத்தின் வெறுக்கத்தக்க பேச்சுக் கொள்கையின்படி தணிக்கை செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: 13 வயது சிறுவன் உருவாக்கியுள்ள அட்டகாசமான செயலி!