மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் நோக்கி சமாலேஷ்வரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று மாலை நான்கு மணியளவில் ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தின் கேட்டாகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில், விரைவு ரயிலின் என்ஜினும் பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்த ரயில் என்ஜினும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதிலும் புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. இந்த விபத்தில், விரைவு ரயிலின் சரக்கு பெட்டி, முன்பதிவில்லா பெட்டி என இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ரயில்வே மீட்பு படையினர் விரைவு ரயிலின் என்ஜின் பகுதியில் சிக்கிய மூன்று ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிங்காபூர், கேட்டாகுடா ரயில் நிலைய தலைமை அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.