ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதியை, அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதான் திவாஸாக நாம் கொண்டாடிவருகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட இந்நாளை தேசிய சட்ட தினமாகவும் கொண்டாடிவருகிறோம். 1949ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி, இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இயற்றப்பட்ட இரண்ட மாதங்களில், அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.
அரசியலமைப்பு தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்கை ஆற்றிய முதல் சட்டத் துறை அமைச்சர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும்வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுத் தலைவரான அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரைப் போற்றும்விதமாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் எனப் பிரதமர் மோடி, 2015ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார்.
அம்பேத்கரின் சிறப்பை எடுத்துரைக்கும்விதமாக சமத்துவத்திற்கான சிலை மும்பையில் நிறுவப்பட்டது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில்தான், பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். 'அரசியலமைப்பின் தந்தை' என அம்பேத்கர் அழைக்கப்படுகிறார்.
அரசியலமைப்பு தினத்தின் முக்கியத்துவம்!
அம்பேத்கரின் போதனைகள், கொள்கைகள் ஆகியவற்றை மக்களிடையே பரப்பும்விதமாகவும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை இயற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை 165 நாள்கள் எடுத்துக் கொண்டது. அடிப்படை உரிமைகள், வழிகாட்டு கொள்கைகள், பொதுமக்களின் கடமைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் அரசியலமைப்பு, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் சோசியலிச குடியரசு நாடு எனப் பிரகடனப்படுத்துகிறது.