ஹூக்லி: “நான் எம்எல்ஏ ஆக மக்கள் பணியை தொடர்வேன், எனினும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்க மாட்டேன்” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரபீர் கோஷல் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அப்போது, “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று கட்சிக்குள்ளேயே சிலர் செயல்பட்டுவருகின்றனர்” என்றும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகள் உள்பட அடிப்படை தொண்டர் உறுப்பினர் பதவியிருந்து இருந்தும் தாம் முறைப்படி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பாடுகளில் எம்எல்ஏ பிரபீர் கோஷல் மற்றும் மாவட்ட தலைவர் திலீப் யாதவ் ஆகியோர் முரண்பட்டுள்ளனர் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், எம்.பி. கல்யாண் பானர்ஜி இரண்டு நாள்களுக்கு முன்பு பிரபீர் கோஷலை கேலி செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மோதலில் அதிருப்தி அடைந்த பிரபீர் கோஷல் தலைமைக்கு எதிராக பேசியதாகவும் தற்போது ராஜினாமா முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோஷல் ராஜினாமாவுக்கு முன்னதாக அவருக்கு கட்சி சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் வருகிற ஏப்ரல்- மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த நான்கு அமைச்சர்கள்!