தனது இரண்டு கைகளையும் பாதி இழந்த சுயாஷ் நாராயண் யாதவ், பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
நீச்சலுக்கு கை மிகவும் அவசியம் என்றாலும், அதனையும் சமாளித்து சாதித்தவர் சுயாஷ். இவர் தனது வாழ்வில் சந்தித்த கோரமான விபத்தை எப்படி கடந்து வந்தார் என்பது பற்றிய பிரத்யேக சிறப்பு தொகுப்பு.
முதல் முதலாக தங்கப் பதக்கம் வென்ற போது எப்படி உணர்ந்தீர்கள்?
அதுதான் நான் உலக அளவில் பெற்ற முதல் தங்கப் பதக்கம். இந்தியாவிற்கும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி வரலாற்றில் அதுதான் முதலாவது தங்கப் பதக்கம். எனக்கு மட்டுமில்லாமல் நமது நாட்டிற்கும் அது பெருமைக்குரிய தருணம் என்றே தோன்றுகிறது. அந்த சாதனை என்னை ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்ள வைத்தது. உண்மையிலேயே அது ஒரு சிறந்த அனுபவம்.
நீங்கள் கைகளை இழந்ததால் மன அழுத்ததைச் சந்தித்தீர்களா?
நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு எனது உறவினர் வீட்டிற்கு ஒரு திருமண நிகழ்விற்காகச் சென்றிருந்தேன். அப்போது நானும் எனது சக நண்பர்களும் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தோம்.
அச்சமயத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒரு இரும்புக் கம்பியில் தெரியாமல் கை வைத்துவிட்டேன். இதனால் என்னுடைய இரண்டு கைகளும் ஆற்றலற்று முடங்கியது. மருத்துவர்கள் எனது முழங்கைக்கு கீழாகத் துண்டிக்க வேண்டும் எனக் கூறிவிட்டனர்.
இதில் வேடிக்கை என்னெவென்றால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவமில்லாமல் நான் இருந்தேன். எனக்கு என்ன நடந்தது என்பதைக் கூட என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதனாலேயே எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், என் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுக்குத்தான் தாங்கமுடியாத மன அழுத்தம் ஏற்பட்டது.
ஆனால் எனக்கோ இரண்டு கைகளையும் இழந்தது மிகுந்த வருத்ததைக் கொடுத்ததே தவிர, அதற்காக நான் மன அழுத்ததைச் சந்திக்கவில்லை. இதிலிருந்து மீளவும் நான் பெரிதாக எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. மெல்ல மெல்ல நான் சுதந்திரமாக மாறினேன். யாருடைய உதவியுமின்றி அன்றாட அலுவல்களை தன்னிச்சையாகச் செய்யுமளவுக்கு இயங்கக் கற்றுக் கொண்டேன்.
இந்த வெற்றிக் கதைக்கு உங்களின் தந்தைதான் காரணக் கர்த்தாவாகவும், பயிற்சியாளராகவும் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரை பற்றி?
கடந்த 1978ஆம் ஆண்டு அவர் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த போட்டி ரத்தானது. அந்த சமயத்தில் அவருடைய கனவுகளும் சேர்ந்தே உடைந்து போயின. இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவை என் மூலமாக அவர் நிறைவேற்ற முயன்றார். எனது தந்தைதான் என் முதல் பயிற்சியாளர். நீச்சலில் அடிப்படைகளை அவரே எனக்கு கற்றுக் கொடுத்தார்.
உங்களுடைய ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்?
எனது உடலமைப்பை நானே கவனித்துக் கொள்கிறேன். நாள்தோறும் ரன்னிங் பயிற்சி செய்வேன். பாக்சிங் க்ளவுஸ் அணிந்து கொண்டு தண்டால் எடுப்பேன். உடற்பயிற்சி கூடத்தில் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்வேன். அதை எனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டு செய்வேன். கொஞ்சம் அப்பர் பாடிக்கு மேற்கொள்ளும் பயிற்சியை விட அதிகமாக லோயர் பாடிக்கு செய்வேன்.
இதுதான் நான் நீச்சலுக்கு முன்னும், பின்னுமாக நாள்தோறும் செய்யும் உடற்பயிற்சிகள். இதைத் தவிர்த்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளை ஃபிட்னஸுக்காக ஒதுக்கிவிடுவேன்.
அடிப்படையில் நான் ஒரு ஸ்பிரிண்டர். எனக்கான குறிப்பிட்ட வகையிலான டயட்டை நான் பின்பற்றுகிறேன். இதனால் எனது உடலுக்குத் தேவையான புரோட்டீன்ஸ் மற்றும் கலோரிஸ் முறையாக சமநிலைப்பட்டுவிடுகின்றன. மீனும், சிக்கனும்தான் எனது பிரதான உணவு. வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடாமலும் இருப்பேன்.
கரோனா காலத்தில் விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் தங்களது உடல் கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதில் சிரமப்படுகிறார்களே.. நீங்கள் இதை எப்படி சமாளிக்கிறீர்கள்?
ஒரு சில விளையாட்டுக்கு வீட்டில் இருந்து பயிற்சி மேற்கொள்ள முடியும். ஆனால், நீச்சல் அப்படியல்ல, உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பயிற்சித் தேவைப்படும். தற்போது அனைத்து நீச்சல் குளங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் நீச்சல் பயிற்சியை முறையாக செய்ய முடிவதில்லை. ஆனால் நான் எனது முயற்சியைக் கைவிடவில்லை. நான் வீட்டிலிருந்தே உடல் தகுதியை சீராக வைப்பதற்கு முடிந்த உடற்பயிற்சியை செய்து வருகின்றேன். தற்போது நான் என்ன மாதிரியான ரன்னிங் பயிற்சி நீச்சலுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
இந்தியா கிரிக்கெட் லவ்விங் நேஷன். இது மற்ற விளையாட்டுக்களை பாதிப்பதாக நினைக்கிறீர்களா? என்ன மாதிரியான மாற்றம் பிற விளையாட்டுக்கள் உத்வேகம் பெற தேவைப்படுகிறது?
என்னுடைய கருத்தைப் பெரும்பாலான மக்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். எங்களுக்கு கொடுக்கும் பரிசுத் தொகைக்கும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு கொடுக்கும் பரிசுத் தொகைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசமே பெரிய பிரச்னைதான்.
மிக முக்கியமான மற்றொரு விஷயம். அவர்களுக்கு என தனி அசோசியேஷனும், அதன் மூலமாக முகாமும் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதைப் போல நீச்சல் போட்டிக்கென எதுவும் கிடையாது. நாம் பிற விளையாட்டுக்களுக்காகவும் நிறைய வீரர்களை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
பாரா ஒலிம்பிக்ஸை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதில் இன்னமும்கூட நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது.
என்னென்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன?
எல்லா நீச்சல் குளங்களிலும் வளைவுகள் ( ramps) இருக்க வேண்டும். ஒருவேளை பயிற்சி பெறுபவர் பார்வைத் திறன் குன்றியவராக இருந்தால் அவருடன் ஒரு உதவியாளரை அனுப்பி வைக்க வேண்டும். இது போன்ற மாற்றங்கள் விரைவில் நடந்தால் நாம் கிரிக்கெட் அடைந்த வெற்றியை விரைவில் கைப்பற்றலாம்.
குறிப்பாக, ஊடகங்களும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. எங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை. நாங்கள் மக்களைச் சென்றடைய ஊடகமும் துணை புரிய வேண்டும்.
நீங்கள் பின்பற்றும் விளையாட்டுத் துறை வீரர்கள் யார் யார்?
நீச்சலைப் பற்றி மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் மைக்கேல் பிலிப்ஸ். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உசேன் போல்ட், விராட் கோலி ஆகியோரைச் சொல்லலாம். நிலைப்புத்தன்மை மற்றும் குணாதியங்களின் அடிப்படையில் சச்சின் தெண்டுல்கரைப் பிடிக்கும்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸை ஒரு வருடம் ஒத்து வைத்துவிட்டது உங்கள் பயிற்சியை எந்த வகையில் பாதித்துள்ளது?
என்னை மட்டுமல்ல, இதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்ட ஒட்டுமொத்த வீரர்களையும் இது பாதித்தது. ஆனால் நான் இதை நேர்மறையாகவே எடுத்துக் கொண்டேன்.
எனது உடலமைப்பை இன்னும் போட்டிக்காக மெருகேறிக் கொள்ளும் கால அவகாசமாக இது இருக்கும். நான் தங்கப் பதக்கத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
வளர்ந்து வரும் நீச்சல் வீரர்களுக்கு நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
என் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொண்ட ஒன்றைதான் நான் பின்பற்றுகிறேன். ‘உங்களிடம் இருப்பதைக் குறித்து சிந்தியுங்கள், உங்களிடம் இல்லாததைப் பற்றி சிந்திக்க வேண்டாம்'. ’உங்கள் வேட்கையைப் பின்பற்றுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு முதலிடத்தைப் பெற்றுத் தராது’