கரோனா பரவல் காரணமாக நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளி வைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், தேர்வினை மேலும் ஒத்திவைத்தால் கல்வியாண்டு பாதிக்கும், ஆபத்தான சூழல் உண்டாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை மேலும் ஒத்திவைத்தால் மாணவர்களின் ஓராண்டு வீணாகும். இதன்மூலம், கல்வியாண்டு பாதிக்கப்படும்.
கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களுக்கு சிக்கல் உருவாகாது. மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு மையங்களை அதிகரிப்பது, மாற்று இருக்கை வசதி, தேர்வு அறையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை அனுமதிப்பது, தேர்வு மையங்களின் நுழைவு வாயில்களை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
நீட், ஜேஇஇ தேர்வுகள் ஏற்கனவே இரு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை மேலும் ஒத்திவைக்க வேண்டாம் என ஆசிரியர்கள், பெற்றோர், உச்ச நீதிமன்றம் மட்டுமின்றி அரசும் விரும்புகிறது. தேர்வுகளை நடத்த வேண்டும் என சமூக வலைதளம், இ-மெயில் மூலம் மாணவர்கள் அழுத்தம் தந்தனர். கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை காரணம் காட்டி பிகார் தேர்தலை ஒத்திவைக்க முடியாது - உச்ச நீதிமன்றம்