ஈடிவி தொலைக்காட்சி தொடங்கி இன்றோடு (ஆகஸ்ட் 27) 25 ஆண்டுகள் நிறைவுபெற்றன. இந்நிலையில், வெள்ளி விழா கொண்டாட்டம் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில், ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ், ஈடிவி தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அலுவலர் பாப்பிநீடு சௌத்ரி, துறைத் தலைவர்கள், ராமோஜி பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர்களான ராம் மோகன் ராவ், விஜயேஸ்வரி, ஈநாடு பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் கிரண், ஈடிவி பாரத்தின் நிர்வாக இயக்குநர் ப்ருஹதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஊடகத்துறையில் சாதனை படைத்துள்ள ஈடிவிக்கு திரைத்துறை பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பிரத்யேகமான 24 மணி நேர தொலைக்காட்சியை தொடங்கி இந்திய ஊடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமை தொழிலதிபர் ராமோஜி ராவையே சேரும். போற்றுதலுக்குரிய ராமோஜி எனக்கு தந்தையை போன்றவர். ஈடிவியின் 25 ஆண்டுகால வெற்றிக்கு அவரின் அர்ப்பணிப்பும், முயற்சியே காரணம்" என தெரிவித்துள்ளார்.
வெள்ளி விழா குறித்து நடிகர் பவன் கல்யாண் கூறுகையில், "25 ஆண்டுகள் நிறைவு செய்த தென்னிந்தியாவின் முதல் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஈடிவி பல விருதகளை பெற்றுள்ளது. பொன் விழாவை கொண்டாடும் தொலைக்காட்சிக்கு எனது வாழ்த்துகள்" என்றார்.
இதுகுறித்து பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமௌலி கூறுகையில், "ஈடிவிக்கும் எனக்கும் சிறப்பான உறவு உள்ளது. ஈடிவியில் ஒளிபரப்பான சாந்தி நிவாசம் என்ற தொடரை நான்தான் இயக்கினேன். தரத்திற்கு மட்டுமே ஈடிவி முக்கியத்துவம் அளிக்கும். வெளியாகும் தகவல் உண்மையா என அறிந்துகொள்ள மக்கள் ஈடிவியைதான் பார்ப்பார்கள். ஈடிவி பல ஆண்டுகளை நிறைவு செய்ய எனது வாழ்த்துகள்" என்றார்.
இதையும் படிங்க: 15 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தகாரரான அமேசான் ஜெஃப் பெசோஸ்