ஜார்கண்ட் மாநிலம் நவடா மாவட்டம் பிகார் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் உபேந்திரா சவுகான். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
ஜார்கண்ட் சாதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இது தொடர்பாக செய்தியை நமது ஈடிவி பாரத் கடந்த மாதம் (டிசம்பர்) 19ஆம் தேதி வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து உபேந்திராவின் குடும்பத்தைக் கண்டறியும் முயற்சியில், சமூக செயற்பாட்டாளர் முன்னு சர்மா, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கிரண் சவுத்ரி ஆகியோர் ஈடுபட்டனர்.
அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. உபேந்திராவின் குடும்பத்தினர் கண்டறியப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து உபேந்திராவின் தாயார் தாஷோதா தேவி நமது ஈடிவி பாரத்துக்கு உருக்கமாகப் பேட்டியளித்தார்.
அதில், “அவன்தான் எங்கள் குடும்பத்தின் தூண். அவனை தொலைத்துவிட்டு நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தேடினோம்; தற்போது கண்டுபிடித்துவிட்டோம்” என்றார்.
உபேந்திரா தந்தை கவுரிகான் சவுகான் கூறும்போது, அவனுக்கு சரியாக வாய்பேச வராது. ஆகவே அவனை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. தற்போது அவன் வீடு வந்து சேர்ந்துவிட்டான் என்றார் கண்ணீருடன் நாதழுதழுத்த குரலில்!