உத்தரபிரதேச மாநிலம் எடாவாஹ் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக ராம்சங்கர் கதேரியா போட்டியிடுகிறார். இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய ராம் சங்கர்,
"மாயாவதி எனக்கு எதிராக 29க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்துள்ளார். ஆனால் அவரை கண்டு நான் பயப்படவில்லை. நான் முழு தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் போராடினேன். எங்களுக்கு எதிராக யாரும் புருவத்தை உயர்த்தினால், நாங்களும் அதே வழியில்தான் செயல்படுவோம்.
எல்லா சூழ்நிலைகளிலும் நான் உங்களோடு இருப்பேன் என உறுதியளிக்கிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் அதிகாரத்தில் உள்ளோம். எங்களை நோக்கி கை நீட்டுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும்" என சர்ச்சையை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனிடையே, 80 தொகுதிகள் அடங்கிய உத்தரபிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.