இந்தியா - சீனா எல்லையில் தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது. கடந்த மாதம் இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ அலுவலர்கள் மேற்கொண்டு வந்த கட்டமைப்பு பணிகளின்போது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்தது. இந்திய ராணுவத்தின் பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய சீன வீரர்களால் பிரச்னை வெடித்தது. அப்போது இருநாட்டு வீரர்களும் கட்டை, கம்பிகள் கொண்டு பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இருநாட்டு அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக பிரச்னை தணிந்ததாக தோற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு அருகே நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் உள்ளிட்ட இந்திய படைவீரர்களை சீன ராணுவத்தினர் கற்கள் கட்டைகள் கொண்டு தாக்கினர். இதையடுத்து, லடாக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சீன படையினருக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், சீன ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
சீன படையிருடன் நடந்த மோதலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் வீரர் ராஜேஷ் ஒராங் வீரமரணம் அடைந்தார். மேற்கு வங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஒராங் (26). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர், உயர்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 2015ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்தார். இந்திய ராணுவத்தின் பிகார் படைப்பிரிவில் கடமையாற்றிவந்த இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
வீரமரணமடைந்த ராஜேஷின் தந்தை சுபாஷ் ஒராங் நம்மிடையே பேசியபோது, "என் மகன் நாட்டுக்கு சேவை செய்தான், அதற்காக அவனுடைய உயிரையும் கொடுத்திருக்கிறான்" என கூறினார்.
இறந்த வீரர் ராஜேஷின் தாய் மம்தா வாய்பேச முடியாதவர். ராஜேஷ் ஒராங் அடுத்த விடுமுறைக்கு ஊருக்கு திரும்பி வரும்போது அவனுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்திருந்தேன். தற்போது அவன் இல்லாமல் போய்விட்டான் என சைகை மொழியில் அந்த தாய் அழுதுகொண்டே கூறியது காண்போரை கண்கலங்கச் செய்தது.
ராஜேஷின் வீரமரணம் குறித்து பேசிய அவரது இளைய சகோதரி, "எனது அண்ணனின் மரணத்திற்கு இந்திய அரசு நிச்சயம் பழிவாங்க வேண்டும்" என கண்ணீர் மல்க கூறினார்.