புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., பி.டி.சி மற்றும் பி.டி.சி.சி முதுகலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு இன்று (ஜூன் 21) காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
எம்.டி., எம்.எஸ் ஆகிய பிரிவுகளுக்கு 125 இடங்களும், எம்.டி.எஸ்., பிரிவில் 2 இடங்களும், பி.டி.எஸ் பிரிவில் 10 இடங்களும், பி.டி.சி.சி பிரிவில் 12 இடங்களும் ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 105 நகரங்களில் 133 தேர்வு மையங்களில் இதற்கான இணையவழி நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லை பகுதிகளில் உள்ள மதகடிப்பட்டு மணக்குளம் விநாயகர் பொறியியல் கல்லூரி, கிறிஸ்ட் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 5 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ் படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. பி.டி.எஸ்., பி.டி.சி.சி ஆகிய படிப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும் தேர்வு தனித்தனியே நடைபெற்றது.
கரோனா தொற்று நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்த தேர்வை மத்திய அரசின் கோவிட்-19 கட்டுப்பாடுகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் நடத்தியுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் முகக் கவசம் உள்ளிட்டவை அளித்த பின்னரே தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதிலுமிருந்து 16 ஆயிரத்து 357 பேர் எழுதியுள்ளதாக அறிய முடிகிறது.