பிகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புல்பராஸ் தொகுதியில் முதலமைச்சர் நிதீஷ்குமார் இன்று (அக்டோபர் 25) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "பிகார் முழுவதும் எனது குடும்பம், இம்மாநில மக்கள் அனைவரையும் எனது குடும்ப உறுப்பினர்களாக தான் பார்க்கிறேன். பிகாரில் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றன. வளர்ச்சி விகிதமும் குறைந்து காணப்பட்டன. ஆனால், அவற்றை எல்லாம் நாங்கள் ஆட்சியில் வந்ததும் சரிசெய்தோம். ஆரம்பத்தில் இருந்தே நீதியின் பாதையில் தான் பயணித்து வருகிறோம்" என்றார்
மேலும் முதலமைச்சர் கூறுகையில், "பெண்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. பொது பணியில் பெண்கள் ஈடுபடுவது குறைந்து காணப்படுகிறது. நாங்கள் அதற்கான தளத்தையும், வாய்ப்பையும் உருவாக்கியுள்ளோம். அதுமட்டுமின்றி பெண்கள் மேம்பாட்டிற்காக நிறைய திட்டங்கள் நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.