புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மத்திய அரசின் உத்தரவுப்படி, குருமாம்பேட்டிலுள்ள காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், யானை வசிப்பதற்கான ஏதுவான சூழல் அங்கில்லை என்பதால் வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வேளையில், புதுச்சேரி வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகியவற்றின் சார்பில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியை இயற்கையான சூழலில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதுச்சேரியில் காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சின்னையாபுரம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்றாண்டுகள் வாடகை ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, வாடகை ஒப்பந்த உடன்படிக்கை கையெழுத்து ஆகும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் இரண்டு கோயில் நிர்வாகிகளும் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.