இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி பாரதி பூங்காவில் பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பான ஓவிய போட்டியை புதுச்சேரி தேர்தல் ஆணையம் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதுச்சேரி பாரதி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அம்மாநில தேர்தல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி தேசிய வாக்காளர் தினத்தின் முக்கியத்துவத்தையும், இளம் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள், பாரதி பூங்கா மதில் சுவரில் போடப்பட்டிருந்த நீண்ட துணிகளில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பு பற்றியும், 100 விழுக்காடு வாக்கு விகிதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆர்வமுடன் தனி தனி குழுக்களாக பிரிந்து ஓவியங்களை வரைந்தனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் ஓவியத்தை வரைந்தனர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனை கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க :நெகிழித் தடையை மதிக்காத ஐஐடி மீது ஏன் நடவடிக்கை இல்லை: உயர் நீதிமன்றம் காட்டம்!