மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறுகட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டத் தேர்தல் எட்டு மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையே கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமையுடன் தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளை தவிர்த்து, மற்ற 50 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இதேபோல் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் அதற்கான தேர்தல் பரப்புரையும் இன்றுடன் முடிவடைகிறது.