குஜராத் மாநிலத்தில் சந்தேசரா சகோதரர்களான நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர்களால் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம், இந்திய வங்கியின் வெளிநாட்டுக் கிளைகள், வெளிநாட்டு வங்கிகள் எனப் பல வங்கிகளில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் பண மோசடி செய்துள்ளது.
இந்த மோசடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடியை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேசரா சகோதரர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத் துறையினர், காங்கிரஸ் மூத்தத் தலைவரான அகமது படேலுக்கு இந்த முறைகேட்டில் சம்பந்தம் இருக்கலாம் எனக் கூறி இருமுறை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தனர்.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக்கு வர அவரது சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மூன்று பேர் அடங்கிய அமலாக்கத் துறையின் குழு அகமது படேல் வீட்டிற்குப் பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காகச் சென்றது.