டெல்லி: பத்திரிகை நிறுவனங்கள் மீது அரசு அமலாக்கத்துறையை ஏவுவது ஏற்புடையதல்ல எனப் பத்திரிக்கை சங்கங்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.
நியூஸ் கிளிக்ஸ் எனும் இணைய ஊடகத்தின் அலுவலகத்தை, மத்திய அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர். மேலும், அதன் செய்தி ஆசிரியர்களின் அலுவலகங்களிலும் திடீரென சோதனையிட்டனர். பல மணிநேரம் இந்த சோதனை நடந்துள்ளது. பண மோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியப் பத்திரிக்கையாளர் சங்கங்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. அதில், நாட்டில் நேர்மையாக மக்கள் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது அரசு இம்மாதிரியான நெருக்கடிகளைக் கட்டவிழ்த்து விடுவது ஏற்புடையதல்ல. பத்திரிகைத் துறையின் சுதந்திரத்தை எந்நேரத்திலும் பறிக்க விடமாட்டோம்.
இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம். அனைவரும் ஒன்றாக இணைந்து தாக்கப்படும் பத்திரிகை நிறுவனமோ அல்லது பத்திரிகையாளருக்கோ தோள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றன.